அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் |

தமிழ் திரையுலகின் முதல் உச்ச நட்சத்திரம் என்ற பெருமைக்குரிய எம் கே தியாகராஜ பாகவதர், 1934ம் ஆண்டு “பவளக்கொடி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, 1960ல் வெளிவந்த “சிவகாமி” என்ற திரைப்படத்தோடு தனது கலையுலக வாழ்விலிருந்தும், உலக வாழ்விலிருந்தும் விடை பெற்றார். ஏறத்தாழ இந்த 16 ஆண்டுகால வெள்ளித்திரைப் பயணத்தில் விரல்விட்டு எண்ணும் அளவிலான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அத்தனையும் அவரது குரலினிமையினால் இன்றும் ரசிக்கப்பட்டு வருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே.
“அம்பிகாபதி”, “அசோக்குமார்”, “சிவகவி”, “ஹரிதாஸ்” போன்ற வரிசைக்கட்டி வந்த அவரது வெற்றித் திரைப்படங்களுக்கு அடித்தளமிட்ட திரைப்படம்தான் “சிந்தாமணி”. 1936ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம்தான் ஓராண்டு வரை ஓடிய முதல் தமிழ் திரைக்காவியம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது. “சிந்தாமணி” திரைப்படத்தில் மொத்தம் 25 பாடல்கள் இடம் பெற்றிருந்தன.
“ராதே உனக்கு கோபம் ஆகாதேடி” என்ற பாகவதரின் தனிப்பாடலுடன், “கிருஷ்ணா கிருஷ்ணா முறையோ கேள் நீ”, “மாயபிரபஞ்சத்தில்” ஆகிய பாடல்களை, சிந்தாமணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த படத்தின் நாயகி அஸ்;வத்தாமாவுடன் பாகவதர் இணைந்து பாடியிருந்ததும் அந்நாளில் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டிருந்தன. படத்தின் கிராமபோன் இசைத்தட்டுகளும் வெகு விமிரிசையாக பிரபலமாகியிருந்திருந்தாலும், இசைத்தட்டில் இடம் பெற்றிருந்த பாடல்களை தியாகராஜ பாகவதர் பாடவில்லை என்பதே உண்மை.
இசைத்தட்டு பதிவுகளை தயாரித்த நிறுவனத்தோடு அவர் ஒப்பந்தத்தில் இல்லாததாலோ, அல்லது வேறு காரணங்களாலோ தியாகராஜ பாகவதர் பாட இயலாமல் போக, ஏறக்குறைய அவரைப் போலவே குரல்வளம் கொண்ட துறையூர் ராஜகோபால சர்மா என்பவரை பாடவைத்து இசைத்தட்டுக்களை வெளியிட்டிருக்கின்றனர். இயக்குநர் ஒய் வி ராவ் இயக்கியிருந்த இத்திரைப்படத்தில் எம் கே தியாகராஜ பாகவதருடன் அஸ்வத்தாமா, செருகளத்தூர் சாமா, எல் நாராயண ராவ் ஆகியோர் நடித்திருக்க, பாடல்களை எழுதி, இசை வடிவம் தந்திருந்தார் பாபநாசம் சிவன்.
சரியாக ஒரு வருடம் வரை ஓடிய இத்திரைப்படத்திலிருந்து கிடைத்த கணிசமான லாபத்தை வைத்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான “ராயல் டாக்கீஸ்” உரிமையாளர்கள், மதுரையில் ஒரு திரையரங்கையே கட்டி, அதற்கு “சிந்தாமணி திரையரங்கம்” என்று பெயரையே வைக்கும் அளவிற்கு ஒரு உன்னத படைப்பாக உருவானதுதான் இந்த “சிந்தாமணி” திரைப்படம்.




